மழைக்காலம் துவங்கியாச்சு... டெங்கு பரவலை தடுக்க சில டிப்ஸ்...

மழைக்காலம் துவங்கிவிட்டது. சிறுவர் முதல் முதியோர்வரை பல்வேறு வயதினர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். அதை கட்டுப்படுத்துவது குறித்து பார்ப்போம்.

ஏடஸ் எஜிப்டை (Aedes Aegypti) எனப்படும் கொசு ரகமே டெங்கு காய்ச்சலைப் பரப்புகிறது. இதன் கருப்பு உடலிலும் நீளக் கால்களிலும் ஆங்காங்கே வெண்கோடுகள் அமைந்திருக்கும்.

இந்தக் கொசு நன்னீரில் முட்டை இடக் கூடியது. பெண் கொசுக்கள் மட்டுமே ரத்தத்தைக் குடித்து நன்னீரில் முட்டையிடும். இந்த கொசுப்புழுக்கள் நீர்ப்பாசியை சாப்பிட்டு பல்கிப்பெருகும்.

நமது வீட்டில் உள்ள தண்ணீர் நிரம்பிய வாளி, குடம், குளியலறை டப் ஆகியவற்றில் இந்த டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்.

டெங்கு கொசுக்கள் நம்மை கடித்து ரத்தம் உறியும். அப்போது நமக்கு டெங்கு வைரஸையும் செலுத்திவிட்டுச் செல்லும்.

இதனால் விட்டுவிட்டு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு, கை, கால் வலி, இருமல், சளி ஏற்படும். அறிகுறிகள் இருப்பின் மருத்துவமனையில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

இந்தக் கொசுக்களை ஒழிக்க தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும்.

தொட்டியில் பூச்செடிகள் வளர்ப்போர் அதிக தண்ணீரை தொட்டியில் ஊற்றக் கூடாது.

இந்த சீசன் முடியும் வரை வீட்டைச் சுற்றி எங்கும் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.