நீரிழிவு வருவதை முன்கூட்டியே அறிந்து தடுப்பது எப்படி?

நீரிழிவு பாதிப்பு வருவதை முந்தைய அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

கண்களை சுற்றி மரு ஏற்படுதல், கை, கால்கள் திடீரென மரத்துப் போகுதல், உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக ஏதாவது இனிப்பு சாப்பிட தோன்றும் உணர்வு போன்றவை ஏற்படக்கூடும்.

உடல் சோர்வு எப்போதும் இருப்பது போன்று தோன்றுவது, பெண்களுக்கு பி.சி.ஓ.டி., பிரச்னை ஏற்படுவது போன்றவை நீரிழிவு பாதிப்பு வருவதற்கான அறிகுறிகளாகும்.

இது போன்ற அறிகுறிகள் ஏற்படும் போது அலட்சியப்படுத்தாமல், உடனடியாக டாக்டரை அணுகி கலந்தாலோசிக்க வேண்டும்.

துவக்கநிலையில் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை முறைகளை பின்பற்றினால், மருந்து, மாத்திரை தவிர்த்து உணவு முறைகளில், பாதிப்பு அதிகரிக்காமல் தடுத்திட முடியும்.

பெற்றோர் மரபு வழியில், 25 - 75 % தொடர வாய்ப்புள்ளதால், தாய், தந்தையருக்கு நீரிழிவு கண்டறியப்பட்டால், குழந்தைகளாக இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உடற்பயிற்சி குறைவு, மன அழுத்தம், ஓய்வு மற்றும் துாக்கமின்மை, இரவு தாமதமாக மாவுச்சத்து நிறைந்த பொருட்களை உண்பது, கூடுதல் இனிப்பு எடுத்துக் கொள்வது போன்றவை கூடாது.

கீரை, காய்கறிகளை உண்ணலாம். பயறு வகை சாப்பிடலாம். பாஸ்ட்புட் உணவு ஆபத்தானது.

உடலிலுள்ள அதிக கொழுப்பால், நீரிழிவு வர வாய்ப்புள்ளதால், உடலில் சேரும் கொழுப்பை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொருவரும் 'ப்ரீ டயாபடிக்' நிலையை கண்டறிந்து விட்டால், நீரிழிவு குணப்படுத்தக்கூடியது தான். பலரும் அலட்சியமாக இருப்பதால் தான், உடல் உறுப்புகள் பாதிக்கிறது.