பெருங்காயமே கொஞ்சம் பொய்யடா! கலப்படத்தை கண்டுபிடிக்க முடியுமா?

உணவிலும், நாட்டு வைத்தியத்திலும் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில், கலப்படம் அதிகமாக உள்ளது. நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சுவை, நறுமணத்துக்காக உணவில் சேர்க்கப்படும் பெருங்காயம், வாயுத்தொல்லையை போக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதை வீட்டிலேயே எளிய பரிசோதனை வாயிலாக கண்டுபிடித்து விடலாம்.

இயற்கை வைத்திய முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பெருங்காயம், ஈரான், ஆப்கன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

விலை அதிகம் என்பதால், இதில் மரப்பிசின், பெருங்காய கழிவுகள், கற்கள், சாயம், மைதா மாவு போன்றவற்றை கலப்படம் செய்து விற்கின்றனர். அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.

சிறிதளவு பெருங்காயத்தை ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொள்ளுங்கள். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். பிசின் கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயம், அப்படி சுடர் விட்டு எரியாது.

சிறிதளவு பெருங்காயத்தை, பவுடர் செய்து ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு, நன்றாக கலக்கவும். பெருங்காய பவுடர் நன்கு கரைந்து, பால் போன்ற வெண்மையான திரவம் வந்தால், சுத்தமான பெருங்காயம் என்று அர்த்தம்.

பெருங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது, வேறு நிறம் வந்தால், சாயம் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அர்த்தம். இதன் மூலம் கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்.

பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.