நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் முதுமையில் இளமை சாத்தியமே!
முதுமையில், இயல்பாகவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்து, நோய் தொற்று பாதிக்கும். இதில், நிமோனியா பாதிப்பு தான் முதலில் உள்ளது.
இதயம், சிறுநீரகங்கள் உட்பட, உடல் பிரச்னைகள் வரும் போது, பல நேரங்களில், உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கு காரணம், நிமோனியாவாக உள்ளது.
நிமோனியாவிற்கு தடுப்பூசி உள்ளது. இதை, ஒரு முறை போட்டுக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுகின்றனர்.
முதுமையில் சத்தான உணவு மிகவும் முக்கியம். சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள், பாதாம், பாகற்காய், தயிர், இஞ்சி, பூண்டு, காளான் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
தவிர, புரதச்சத்து அதிகம் உள்ள பால், முட்டை, பருப்பு, சோயா, நார்ச்சத்து அதிகம் உள்ள சிறு தானியங்கள் சாப்பிட்டால், பெருங்குடலில் வரும் புற்றுநோயைத் தவிர்க்க முடியும்; மலச்சிக்கல் வராது.
சிறுதானியங்களில், கால்ஷியம் சத்து அதிகம் என்பதால், எலும்புகளுக்கு வலு கிடைக்கும். அரிசி, கிழங்கு போன்ற மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஒரு நாளைக்கு ஒரு நபர், 5 கிராம் உப்பு தான் சேர்க்க வேண்டும்; ஆனால், 12 முதல் 14 கிராம் வரை சேர்க்கிறோம். 60 வயதிற்கு மேல், குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது.
அறுபது வயதிற்கு மேல் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால், ரத்த அழுத்தம் குறையும்; சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்; உடல் பருமன் இருக்காது.
வயதானவர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, வைட்டமின் டி குறைபாடு. தினமும், 30 முதல், 50 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருந்தால், இந்தப் பிரச்னையே வராது.