மண்ணில் கரிம சத்தை அதிகரிப்பது எப்படி?
நல்ல விளைச்சலுக்கு மண்ணில் 3 - 5 % அளவு கரிமச்சத்து இருக்க வேண்டும். பல மாவட்டங்களிலுள்ள நிலங்களில் கரிமச்சத்து 0.5 - 1 % ஆகவுள்ளதால், மண்வளம் குறைந்து மகசூலும் குறைகிறது.
கரிமச்சத்து இருந்தால் தான் மண்வளத்தை அதிகரிக்கும். தண்ணீரை நீண்ட நேரம் தக்கவைக்கும். பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை மெதுவாக வழங்கும்.
மண்ணில் நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் பெருக உதவும். வறட்சியிலும் பயிர்கள் நன்றாக வளரும்.
எனவே, மண்ணில் கரிம சத்தை அதிகரிக்க, நிலத்தை அடிக்கடி ஆழமாக உழுவதைத் தவிர்க்கவும். மாட்டுச்சாணம், ஆட்டு எரு, மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை மண்ணில் இடவும்.
பசுந்தாள் உரங்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி விதைகளை, பயிர் செய்வதற்கு முன் மண்ணில் விதைத்து, அவற்றை பூக்கும் நிலையில் மடக்கி உழ வேண்டும்.
அறுவடைக்குப் பிறகு வைக்கோல், சோளத்தட்டை பயிர்க் கழிவுகளை எரிக்காமல் மண்ணிலேயே மட்க விட்டால் உரமாகி விடும்.
ஒரே பயிரைத் தொடர்ந்து பயிரிடாமல் பயறு, தானியப் பயிர்களை மாற்றி மாற்றி பயிரிடவும்.
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்.