காசநோய் கண்டறியும் கருவி உள்நாட்டு தயாரிப்புக்கு ஐ.சி.எம்.ஆர்.,அங்கீகாரம்

காசநோயை விரைவாக கண்டறிய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு பரிசோதனை கருவிகளுக்கு ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

காசநோய் என்பது ஒருவகை பாக்டீரியா தொற்றால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தும்மல், சளி போன்றவை மூலம் பரவக்கூடியது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி, 2024ல் நாடு முழுதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

காசநோயை முழுமையாக ஒழிப்பதற்கு, அதை ஆரம்பத்திலேயே துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.

இதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். அதற்கான பணிகளில் மத்திய - மாநில சுகாதார அமைச்சகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காசநோயை கண்டறிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு பரிசோதனை கருவிகளை ஐ.சி.எம்.ஆர்., அங்கீகரித்துள்ளது.

அவற்றில் ஒன்று, 'குவான்டிபிளஸ் எம்.டி.பி.,' விரைவு பரிசோதனை கருவி. சளி அல்லது 'ஸ்வாப்' எனப்படும், திரவ மாதிரியை எடுத்து, அதை பி.சி.ஆர்., கருவியில் வைத்து பரிசோதனை செய்யபடும்.

இரண்டாவது கருவி, 'யுனிஆம்ப் எம்.டி.பி., நியூக்ளிக் ஆசிட்' பரிசோதனை அட்டை. இந்த இரு கருவிகளையும் தெலுங்கானாவைச் சேர்ந்த 'ஹுவெல் லைப் சயின்சஸ்' என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது.

காசநோயை கண்டறிய நோயாளி பலமாக இருமி நுரையீரல் சளியை சேகரித்து தர வேண்டிய சூழல் உள்ளது.

இந்த யுனிஆம்ப் கருவியில், தொண்டையில் இருக்கும் திரவ மாதிரியை எடுத்து பரிசோதிக்க முடியும்.

இது, குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மிகவும் எளிமையான, வலி இல்லாத சிகிச்சை முறையாக இருக்கும்.