கண் வலியை போக்கும் ஐஸ் ஒத்தடம்
அதிகப்படியான வெப்பம், வறண்ட வானிலை, காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பது போன்றவை கண்களைப் பாதுகாக்கும் இயற்கையான கண்ணீர் படலத்தைப் பாதிக்கலாம்.
கண்ணீர் விரைவாக ஆவியாவதால் கண் எரிச்சல், உறுத்தல், கண் சிவத்தல் ஏற்பட்டு கண்களை வறட்சியாக்கலாம்.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, வெப்பக் காற்று, அதிக அளவில் ஏ.சி., பயன்பாடு ஆகியவை இந்த நிலையை மேலும் மோசமாக்கலாம்.
கோடையில் ஏற்படும் கண் ஒவ்வாமையால், வீக்கம், வலி ஏற்படலாம். அரிப்பு, எரிச்சல், கண் சிவத்தல், கண் இமை வீக்கம், கண்ணீர் வடிவது பொதுவான அறிகுறிகள்.
குறிப்பாக, குழந்தைகள், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு அதிக பாதிப்பு எற்படும்.
நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தும் போது கண்களை இமைக்க மறந்து விடுகிறோம். இதனால், கண்கள் வறட்சியாகி, கண் சோர்ந்து விடுகிறது.
எனவே, வெளியில் செல்லும் போது, புற ஊதாக்கதிர் தடுப்பு கொண்ட கூலிங் கிளாஸ் அணியலாம்.
ஏ.சி. அறையில் இருந்தால் தாகம் எடுக்காமல் போகலாம்; ஆனாலும் குறிப்பிட்ட இடைவேளையில் தண்ணீர் குடிக்க மறக்கக்கூடாது.
அடிக்கடி கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று திரும்பியதும், சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
கண்களில் வலி, அரிப்பு ஏற்பட்டால் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுவதும், மூடிய கண் இமைகளின் மேல் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதும் நல்ல பலனைத் தரும்.
மருத்துவ ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாகக் கண் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்தக் கூடாது.
கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஸ்கிரீனிலிருந்து கண்களை விலக்கி, 20 அடி தூரத்திலுள்ள பொருளை 20 வினாடிகளுக்குப் பார்க்க வேண்டும்.
இதனால் கண் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். நிமிடத்திற்கு 10-15 முறை கண் சிமிட்டுவது இயல்பானது. இதைச் செய்ய மறக்கவே கூடாது.