மதுரைக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகள் வருகையில் மாநில அளவில் துாங்காநகரம் மதுரை 2ம் இடம் பெற்றுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம், தெப்பக்குளம், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் என வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன.
இங்கு வரும் பயணிகள், மதுரையை மையமாகக் கொண்டு ராமேஸ்வரம், கொடைக்கானல், தேக்கடி, கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் செல்கின்றனர்.
இதனால் மதுரை வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஓட்டல்கள், போக்குவரத்து போன்ற சுற்றுலா சார்ந்த தொழில்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன.
2020, 2021களில் கொரோனா காரணமாக மதுரையில் சுற்றுலா கடுமையாக பாதித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கிய பின், மதுரையில் சுற்றுலா படிப்படியாக மீண்டது.
2023க்குப் பிறகு பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்க துவங்கியது. 2024ல் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2.2 கோடியாகவும், 2025ல் 2.9 கோடியாகவும் உயர்ந்தது.
வெளிநாட்டு பயணிகளைப் பொறுத்தவரை 2024ல் 57 ஆயிரத்து 564ல் இருந்து மறுஆண்டில் 98, ஆயிரத்து 70 ஆக அதிகரித்ததாக கூறப்படுகிறது.
சுற்றுலாவை மேம்படுத்த பாரம்பரிய சுற்றுலா, இரவு நேர சுற்றுலா, நிரந்தர பொருட்காட்சி உள்ளிட்ட புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.