மார்பகங்களில் ஏற்படும் வலி கேன்சரின் அறிகுறியா?
பெண்களுக்கு, மார்பகத்தில் அடிக்கடி வலி வந்தால், கேன்சராக இருக்குமோ என்ற பயம் இருக்கும்.
20 - 30 வயதில், மாதவிடாய் துவங்கும் முன், மார்பகத்தில் வலி இருக்கும்; கனமாக இருக்கும். இது இரு மார்பகங்களிலும் இருக்கலாம்; ஒரு பக்க மார்பகத்திலும் வலி இருக்கலாம்.
அதே போன்று, 'மெனோபாஸ்' எனும் மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய, 'பெரிமெனோபாஸ்' நிலையிலும், ஒரு பக்க மார்பகத்திலோ அல்லது இரு மார்பகங்களிலுமே அடிக்கடி வலி வரலாம்.
மார்பகங்கள் கனமாக இருப்பதைப் போன்று உணரலாம். இவை அனைத்தும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள்.
இதற்கும் கேன்சருக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. அதேப்போல, கர்ப்ப காலத்திலும், தாய்ப் பால் தரும் போதும் இது போன்ற பிரச்னைகள் வரலாம்.
ஒரு சிலருக்கு எந்த காரணமும் இல்லாமல் வலி வரும். உடல் தன்மைக்கு ஏற்ற சரியான உள்ளாடை அணியாமல் இருந்தாலும் வலி வரும்.
தசைகளில் வலி இருந்தாலும், மார்பகத்தில் வலி இருப்பதைப் போன்று உணரலாம். இவற்றிற்கும் கேன்சருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மார்பக வலி, கேன்சரின் பிரதான அறிகுறி கிடையாது. மார்பகத்தில் கட்டி, வலி இல்லாமல் வளர்ந்தால் கேன்சராக இருக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
மார்பக வலியுடன் கட்டி, மார்பக காம்புகளில் ரத்தம், திரவம் வடிவது, புண் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
40 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு, 'அல்ட்ரா சவுண்டு' அல்லது அதற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு, 'மேமோகிராம்' பரிசோதனை செய்ய வேண்டும்.
இதில், 'பைப்ரோ அடினாட்டிக் பிரஸ்ட்' என இருந்தால், ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களால் வலி, கனமான உணர்வு ஏற்படுகிறதென, புரிந்து கொள்ளலாம்.