இரவு 10 மணிக்கு பிறகு பிரியாணி சாப்பிடலாமா?

பிரியாணி பலருக்கும் மிகவும் பிடித்த உணவு. ஆனால் வேலை முடிந்து இரவு நேரத்தில் தாமதமாக பிரியாணி சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

குறிப்பாக இரவு 10 மணிக்கு பிறகு சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும், செரிமானத்தில் மாற்றம் உண்டாகுமா என்ற கேள்விக்கு விடையில்லை.

ஒரு முறை மட்டும் இரவில் பிரியாணி சாப்பிடுவது பெரும்பாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால், இதில் அதிக கலோரி, வெள்ளை அரிசி, எண்ணெய், மசாலா மற்றும் இறைச்சி இருப்பதால், கனமான உணவாக மாறுகிறது.

பகல் நேரத்தில் உடல் சுறுசுறுப்பாக இயங்கும் போது செரிமானமும் வேகமாக நடைபெறும். ஆனால், இரவில் உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும்.

எனவே, இதை தூங்குவதற்கு முன் சாப்பிடும்போது செரிமானத்திற்கு அதிக நேரம் தேவைப்படும்.

பிரியாணி போன்ற கனமான உணவுகளை தாமதமாக உட்கொள்ளும் போது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், அஜீரணம், வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வுகள் உண்டாகும்.

இதுதவிர, இரவில் தூக்கம் கலைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். குறிப்பாக, சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்ளும்போது இந்த அறிகுறிகள் மேலும் தீவிரமடையும்.

ஒரு நாள் மட்டும் பிரியாணி சாப்பிடுவதால் உடனே உடல் எடை அதிகரிக்காது. ஆனால், தொடர்ந்து இரவு நேரத்தில் அதிகளவு சாப்பிடுவது உடல் எடையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரவு நேரத்தில் தேவைக்கு அதிகமான கலோரிகளை உடல் பெறுவதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு பாதிக்கப்படலாம்.

இரவில் அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்பட்டு, மறுநாள் அதிக பசி ஏற்பட்டு மீண்டும், அதிகமான உணவை சாப்பிடும் நிலைக்கு வழிவகுக்கலாம்.