ரிவர்ஸ் ஜாக்கிங் என்ன நன்மைகள் தரும்?
ரிவர்ஸ் ஜாக்கிங் எனும் பின்னோக்கி ஓடுவது வினோதத்துக்காகவோ, வேடிக்கைக்காகவோ அல்ல. ஆரோக்கியரீதியிலும் நிறைய பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இப்படி ஓடும்போது முழங்காலுக்குக் குறைவான அழுத்தம் கிடைப்பதால், முழங்காலில் ஏற்படும் காயங்களும் கணிசமான அளவில் குறைவதாகவும் கூறுகின்றனர்.
சாதாரணமாக ஓடுவதைவிட, பின்னோக்கி ஓடும்போது ஒவ்வொரு அடியின்போதும் பின்புறம் மற்றும் பின்னங்கால்களின் தசைகளை அதிகமாக உபயோகிக்கப்படும்.
இதனால் அதிகப்படியான ஆற்றலும், முழு கவனமும் தேவைப்படுகிறது. கவனம் ஒருமுகப்படுவதால் ஒருவிதத்தில் நம்முடைய மன அழுத்தத்தை குறைக்க முடிகிறது.
பின்னோக்கி ஓடுவதால், பின்புறம் மற்றும் பின்னங்காலின் தசைகளும், நரம்புகளும் வலுவடைவதால் நிமிர்ந்த நேரான தோற்றத்தையும் பெற முடியும்.
இடுப்பு, பின்புறம், பின்னங்கால்கள் மற்றும் தோள்கள் நல்ல திண்மை பெற்று பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை பெற முடியும்.
இதற்காக கிரவுண்டுக்கோ, வெளியிடங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டை சுற்றி உள்ள பகுதி, மொட்டை மாடி போன்ற இடங்களிலும் செய்வதற்கு எளிதானது.
ட்ரெட்மில்லில் இதுபோன்ற பயிற்சிகள் செய்யும்போது கவனமுடன் செய்வது அவசியம். இல்லாவிட்டால் தவறி விழுவதற்கும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.