புதரில் உருவாகும் ஒட்டுண்ணியால் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் வரலாம்

புதர் மண்டிய பகுதிகளில், 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' என்ற ஒட்டுண்ணியால், 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது.

மலை பகுதிகள், புதர் மண்டிய இடங்களில், 'ஸ்க்ரப் டைபஸ்' ஒட்டுண்ணி பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன.

'ஸ்க்ரப் டைபஸ் என்பது பாக்டீரியா காரணமாக ஏற்படும் ஒரு வகையான தொற்று நோய். இந்த பாக்டீரியா உள்ள ஒட்டுண்ணி பூச்சிகள் கடித்தால் இந்த நோய் பரவும்.

வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், புதர் மண்டிய பகுதிகளுக்கு அருகில் வசிப்போர் மாதந்தோறும், 50 முதல் 100 பேர் வரை, 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

'ஸ்க்ரப் டைபஸ்' பாதிப்பு ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு, சிவப்பாக சிறிய தடுப்புகள் ஏற்படும். தலைவலி, குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழக்கும். கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்னைகள் உருவாகும்.

அதனால் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகவும். அதற்கு சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.