உடலுக்கு உடற்பயிற்சி போல கண்களுக்கு பயிற்சி உள்ளதா?
உடற்பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதேபோல கண்களுக்கும் பயிற்சி அவசியம்.
எப்போதும் அலைபேசி, டிவி, கம்ப்யூட்டர் பார்க்க வேண்டியிருப்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் கண்களுக்கு பயிற்சியளிப்பது அவசியம்.
கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களுக்கு சில நிமிடங்கள் ஓய்வு தரவேண்டும்.
கம்ப்யூட்டரில் இருந்து கண்களை விலக்கி இமைக்க வேண்டும். கருவிழியை மேலே, கீழே, இடது, வலது என அசைக்க வேண்டும். கம்ப்யூட்டரை கை அகல துாரத்தில் வைத்து பணி செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டரை அருகில் பார்க்கும் அதேவேளையில் துாரத்திலுள்ள ஏதாவது ஒரு பொருளையும், அடிக்கடி பார்க்குமாறு உங்கள் இருக்கை அமைய வேண்டும்.
கண்களுக்கு போதிய பயிற்சி கிடைக்காததால் மயோபியா, ஹைப்பர் மெட்ரோபியா, வயதாகும் போது கிட்டப்பார்வை குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
ஸ்மார்ட்போனை ஒரு மணி நேரம் அருகில் வைத்து பார்த்துவிட்டு சற்று துாரத்திலுள்ள ஒரு பொருளை பார்த்தால் அது மங்கலாக தெரியும். அப்படி ஏற்படாமல் இருக்க கண் பயிற்சி அவசியம்.
பத்து நிமிடங்கள் சற்று ஓய்வெடுத்து துாரத்தில் உள்ள பொருளை பார்க்க வேண்டும். சுத்தமான நீரால் கண்ணை கழுவலாம்.
கண்களை அடிக்கடி சிமிட்டியும், இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக, வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக நகர்த்தியும் பயிற்சி செய்ய வேண்டும்.
கழுத்திற்கும் பயிற்சி தரவேண்டும். அசையாமல் கழுத்தை வைத்திருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். கழுத்தின் இடது, வலதுபக்கம், மேலே, கீழே என அசைத்து பயிற்சி தரவேண்டும்.