பழைய, புளித்த தயிரை சாப்பிடுவது பாதுகாப்பானதா?
தயிரிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் பாலை நொதிக்கச் செய்து லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன. நொதித்தல் தொடர்வதால் அமிலத்தின் அளவு அதிகரித்து தயிர் புளிப்பாகிறது.
தயிர் புளிப்பாக இருப்பது மட்டுமே அது கெட்டுவிட்டதாக அர்த்தமல்ல. பிரிட்ஜில் முறையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தால், சற்று கூடுதலாக புளித்திருந்தாலும் அதை சாப்பிடலாம்.
பழைய தயிரை சாப்பிடலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதில் அதன் சேமிப்பு முறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
தயிரை எப்போதும் சுத்தமான, மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் சேமிக்க வேண்டும்.
குறிப்பாக, வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் தயிரை வெளியில் வைத்திருந்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
தயிரின் மேற்பரப்பில் பூஞ்சை வளர்ச்சி, பச்சை, கருப்பு, இளஞ்சிவப்பு போன்ற அசாதாரண நிற மாற்றங்கள், அழுகிய வாசனை அல்லது வழக்கத்திற்கு மாறான வாசனை...
அதிகப்படியான வழவழப்புத் தன்மை மற்றும் வழக்கமான புளிப்பிலிருந்து மாறுபட்ட சுவை ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அதை சற்றும் யோசிக்காமல் தூக்கி எறிவது பாதுகாப்பானது.
பூஞ்சை படிந்த தயிரில் தெரியும் பகுதியை மட்டும் அகற்றி சாப்பிடக்கூடாது. மாசுபாடு கண்களுக்கு தெரியாத பகுதிகளிலும் பரவியிருக்கலாம்.
கெட்டுப்போனதற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அதிகப் புளிப்புத்தன்மை சிலருக்கு அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு அசவுகரியம் போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக, அமிலத்தன்மை கொண்ட உணவுகளை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களுக்கு இந்தப் பிரச்னைகள் வர அதிக வாய்ப்புள்ளன.