உடலில் நீர்சத்து குறைவாக இருப்பது ஆபத்தா? தவிர்க்க என்ன வழி?

அவரவர் தேவைக்கேற்பத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இடத்தின் தட்பவெப்ப நிலை, வேலை, உடல் நோய்கள், உடல் எடை போன்றவற்றால் குடிக்கும் தண்ணீரின் மாறுபடும்.

தேவைக்கேற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான், தினமும் 8 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என கூறப்படுகிறது.

தண்ணீர் தேவை என்பது அனிச்சையாக எழும் தாக உணர்வு தான். மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது.

நமது உடலிலுள்ள நீருக்கும், உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பது தான் இதன் வேலை. உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும்.

அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தத் துாண்டப்படுவோம். உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை சென்று தேவைக்கு மிகுதியாவுள்ள நீர் வெளியேற்றப்படும்.

எனவே, தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்துவது சரியானதும் கூட. சரியான அளவில் தண்ணீர் அருந்துகிறோமா என்பதை 2 வழிகளில் அறியலாம்.

3 - 4 மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். பகலில் விழித்திருக்கும் போது (காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி). 5 - 6 தடவை சிறுநீர் கழிப்பது நல்லது.

இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான். 6 மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருப்பது நல்லதல்ல.

இரவு பல மணி நேரம் நீர் அருந்தாமல் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கவலைப்பட வேண்டாம்.

நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் காலையில் ஒரே நேரத்தில், அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்கலாம். இதனால் நன்மையோ, தீமையோ இல்லை.

தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் அதை சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும்.