பதட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை அவசியமா?

பதட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயமாக மனநல ஆலோசனை தேவை. மனநோய் பாதித்துள்ளது என்ற நிலையை அவர்கள் ஏற்க மறுப்பர்.

குடும்ப மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவர் இதனை எடுத்துக்கூறி மனநல ஆலோசனைக்கு அனுப்ப முயற்சித்தால், கோபம் கொண்டு அவர்களையும் தவிர்ப்பார்கள்.

பதட்டநோய்களின் அறிகுறிகளுக்கான முக்கிய காரணம் உடலிலுள்ள தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலத் தூண்டுதலே.

மனநல மருத்துவர் அளிக்கும் சிகிச்சை பதட்டத்தை முழுமையாகச் சரி செய்தாலும், சிறிது காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையை மீறி நிறுத்தி விடுவர்.

பதட்டநிலை தொடர்ந்து நீடித்தால் நாள்பட்ட கோளாறாக மாறிவிடும். பதட்ட நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையாது.

இதன் அறிகுறிகள் உடல் ரீதியான நோய்களை பல நேரங்களில் திசை திருப்பும் அபாயமுண்டு. இது எதிர்மறையாகவும் நடக்கலாம்.

இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேண்டியும், நோயாளிகளின் வற்புறுத்தலினாலும் மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.

பதட்டநோய் பாதித்தவர்களுக்கு உறவினர்களோ, பராமரிப்பவரோ தவறான ஆலோசனைகள் வழங்கக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையை முறையாக கடைப்பிடிக்க உதவ வேண்டும்.

பதட்டத்தை தவிர்க்க ஓய்வு, தியானம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். மனதிற்கு இதமளிக்கும் செயல்களை செய்வதும் நல்ல பலனை தரும். போதைப் பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.