ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?

'பேஸ்புக், எக்ஸ், வாட்ஸாப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களை, இளம்தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த, பசிபிக் கடல் தீவு நாடான ஆஸ்திரேலியா தடை விதித்தது.

புதிதாக யாரும் கணக்கு துவங்க முடியாது என்றும், பயன்பாட்டிலுள்ள கணக்குகள் நீக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, அங்கு 3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றமும், இது போன்ற தடைகளை இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு, கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆலோசிப்பதாக, அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

'சிறுவர்-சிறுமியர் சமூக ஊடகங்களில் இருக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் தாங்கள் காணும் உள்ளடக்கத்தை முழுமையாக புரிந்து கொள்வதில்லை.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.