மரப்பலகைகளில் காய்கறி வெட்டுகிறீர்களா?
சில ஆண்டு காலமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்ட, பிளாஸ்டிக் வெட்டுப் பலகைகளை பயன்படுத்துகின்றனர், பெரும்பாலானோர்.
அதில் ஏற்படும் தீமைகளை அறிந்து, பலரும் அதை தவிர்த்து, மரப் பலகைகளுக்கு மாறி வருகின்றனர். இவ்வாறு மாறியவர்களுக்கு, அதிர்ச்சி தரும் விஷயம் இது.
காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் மரப்பலகை கூட, பாதுகாப்பானது இல்லை என மருத்துவ உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மரம், அதன் இயல்பிலேயே நுண்துளைகள் கொண்டது. அதாவது, அதன் மீது வைத்து வெட்டிய காய்கறிகளிலிருந்து, அது ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி விடும்.
தக்காளிச் சாறு, பச்சை மாமிச துண்டுகள், இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை, மரப்பலகையால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.
இந்த ஈரப்பதம், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் செழித்து வளர அனுமதிக்கிறது.
காலப்போக்கில், இந்த மரப் பலகைகள், கீறல் விட ஆரம்பிக்கின்றன. இந்தச் சிறிய விரிசல்களை முழுவதுமாக சுத்தம் செய்வது கடினமானது.
மேலும், சால்மோனெல்லா, ஈகோலி போன்ற, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், இதில் வளர ஆரம்பிக்கின்றன. இவை நாம் சமைக்கும் உணவை மாசுபடுத்தி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நாட்கள் செல்லச் செல்ல, இந்த பலகைகளின் சிறு துண்டுகள் உதிர ஆரம்பிக்கும். இந்த துகள்களை உட்கொள்வது, வயிற்று ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.