கைலாஷ் யாத்திரை செலவு ரூ.2.09 லட்சமாக அதிகரிப்பு

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு செல்லும் பயணம், கைலாஷ் மானசரோவர் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

உத்தரகண்டின் லிபுலேக் கணவாய் வழியாகவும், வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் நாதுலா கணவாய் வழியாகவும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

'இந்தாண்டுக்கான யாத்திரையில் பங்கேற்க விரும்புவோர், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, நம் வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

சிக்கிம் வழியில் செல்லக்கூடிய யாத்திரை ஜூலை 4ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சமீபத்திய அமெரிக்க டாலர் மதிப்பின் உயர்வு, திபெத்தில் பயண செலவுகளை நேரடியாக பாதித்துள்ளது.

இந்த பயண திட்டத்துக்கு கடந்த ஆண்டு 1.74 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது அது, 2.09 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், இந்தியா பகுதியில் மேற்கொள்ளப்படும் யாத்திரைக்கான செலவு 65,000 ரூபாய் மட்டுமே. திருத்தப்பட்ட கட்டணம் இறுதி செய்யப்பட்டு, யாத்திரைக்கான பதிவு நடந்து வருகிறது.