இன்று காரடையான் நோன்பு அன்று கணவரின் ஆயுள் நீடிக்க காமாட்சியை வழிபடலாம்.
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற் கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு.
இந்நாளில் சாவித்திரி தேவியை வழிபடுவதால் இதனை 'சாவித்திரி விரதம்' என்றும் அழைப்பர்.
இந்த நோன்பு நாளில் தான், எமனின் பிடியில் இருந்து கணவர் சத்தியவானை மீட்டாள் சாவித்திரி.
இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர்.
இந்த நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரடை கழுத்தில் அணிந்து கொள்வர்.
கணவர் (அ) வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு. திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும்.
விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். உருகாத வெண்ணெய்யை அடையோடு படைத்து வழிபடுவர்.
குடும்பத்திலுள்ள பெண்கள் ஒன்றாக அமர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும்.
பசுக்களுக்கு இதை சாப்பிடக் கொடுப்பது மிக அவசியம். அப்போது தான் நோன்பு முழுமை அடைவதாக ஐதீகம்.
இந்த விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் அம்மனுக்கு கேசரி (அ)சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின், மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்ளலாம்.