எத்தனை டெசிபல் தினமும் கேட்கலாம்?

இன்றைய நாகரிக உலகில் எல்லா நேரமும் காதில் 'ஹெட் செட்' வைத்து, மொபைல் போனில் பேசுவது, கேட்பது வாடிக்கையாகி விட்டது.

இது தவிர, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழா காலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் போன்றவை காரணமாக அதிகளவில் ஒலி மாசு, காதுகளை பாதிக்கிறது.

இந்த ஒலி மாசு, கேட்கும் திறனை வெகுவாக பாதிக்கிறது. 80 டெசிபல் ஒலிக்கு அதிகமான சத்தங்களை, நீண்ட நேரம் தொடர்ச்சியாக கேட்பது, உள்காதில் உள்ள செல்களை பாதிக்கும்.

இதனால் நரம்பு சேதம் ஏற்பட்டு, காது நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கும் அபாயமுள்ளது. கேட்கும் திறன் இழப்பை குணப்படுத்த முடியாது.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல், 80 டெசிபலுக்கு மேல் ஒலிகளை கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து காதில் சத்தம் கேட்கும். சிலருக்கு தொடர்ந்து இரைச்சல் ஏற்படலாம். இது, துாக்க கலக்கம், வேலையில் கவனம் செலுத்த இயலாமை, எரிச்சல், தொடர்ச்சியான தலைவலிக்கு வழிவகுக்கும்.

ஒலி மாசு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு தெளிவின்மை பிரச்னையும் வரும். சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு தலைச்சுற்றலும் ஏற்படலாம்.

தினமும் அதிக சத்தங்களை கேட்டு, செவித்திறனில் ஏதேனும் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

கேட்கும் திறன் அளவை மதிப்பிடுவதற்கு, 'ப்யூர் தொனி ஆடியோமெட்ரி' என்ற பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

தொழிற்சாலை, சுரங்கத் தொழில், ஜவுளி ஆலை பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் போன்றோர் வேலை செய்யுமிடத்தில் காது மப்ஸ், காது பிளக்குகள் போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துவது நல்லது.