பத்ரிநாத்தை மிஞ்சிய கேதார்நாத்... பக்தர்களை ஈர்ப்பதில் சாதனை

உத்தரகண்ட் செல்லும் சிவன் - விஷ்ணு பக்தர்கள் அனைவரும் அறிந்த தலங்கள், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள். உலகளவில் ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

சாலையோரம் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலுக்கு, யாத்திரை செல்வது சுலபம் என்பதால் பலரது கவனம் அந்த புனித தலத்தின் மீதே இருந்தது.

கடினமான மலைப்பாதைகள், சவாலான சீதோஷ்ண நிலை, 16 கி.மீ., துாரத்துக்கான மலைப் பாதை பயணம் போன்றவை , கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தடையாக இருந்தன.

அதேசமயம், 2013ல் ஏற்பட்ட பெரு வெள்ளம், அங்கு பேரழிவை உண்டாக்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்த நிலையில், உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

தோல்வியை கண்டு துவளாமல், அழிந்த கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக , பத்ரிநாத்தைவிட இங்கு செல்லும் பக்தர்கள் அதிகமாகியுள்ளனர்.

கேதார்நாத் கோவிலுக்கு இந்தாண்டுக்கான யாத்திரை கடந்த 23ம் தேதி முடிவடைந்த நிலையில், 17.68 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். பத்ரிநாத்க்கு 14.15 லட்சம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.

முன்பு வயதானவர்கள் அதிகளவு கேதார்நாத் கோவிலுக்கு யாத்திரையாக வந்த நிலையில், தற்போது அது மாறி, இளைஞர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.