சிறுநீர் கசிவுக்கு கெகல் பயிற்சி செய்யலாம்!!
இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் கசிவது, ஆண், பெண் இரு பாலரும் எதிர்கொள்ளும் உபாதையாக உள்ளது. இதற்கு, உடற்பயிற்சி மூலம் தீர்வு காணலாம்.
குறிப்பாக பிரசவ காலத்தில், ஆசன வாயை சுற்றி உள்ள இடுப்புத் தசைகள், அதிகம் தளர்வுடையும். அதற்கு பின், சிறுநீர் கசிவு, வாயு பிரிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதை, 'கெகல்' பயிற்சியால் சரி செய்து விடலாம். ஆசன வாய் மற்றும் மூத்திர தசை ஆகிய இரண்டையும், ஒரு சேர சுருக்கி, தளர்த்துவது தான், கெகல் பயிற்சி.
மூச்சை உள்ளே இழுக்கும் போது, ஆசன வாய் மற்றும் மூத்திர தசையை சுருக்க வேண்டும். 5 - 10 வினாடிகளுக்கு பின், மூச்சை வெளியேற்றும் போது, இந்த தசைகளை தளர்த்த வேண்டும்.
இதை எளிதாக சொல்ல வேண்டுமானால், சிறுநீர் முட்டிக் கொண்டு வரும் போது, கழிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனால், அடக்குவோமே, அது போலத் தான் இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
எனினும், சிறுநீர் முட்டிக் கொண்டிருக்கும் போது செய்யக் கூடாது; மலம், சிறுநீர் கழித்த பின் தான், செய்ய வேண்டும். இந்த பயிற்சியை, வீட்டில், அலுவலகத்தில், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
எனினும், காலை, மாலை, இரவு என, மூன்று வேளையும், நாற்காலியில் அமர்ந்தபடி, இந்த பயிற்சியை, தலா, 10 முறை என, 30 முறை செய்ய வேண்டும்.
இதை தொடர்ந்து செய்யும் போது, தசைகள் இறுக்கம் அடைவதை, பயிற்சி மேற்கொள்பவர்களால் உணர முடியும். பிரச்னை தீரும் வரை, இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.