கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உப்பு சீடை... வெடிக்காமலிருக்க இதோ டிப்ஸ் !
தேவையானப் பொருட்கள் : அரிசி மாவு - 6 பங்கு, உளுந்து மாவு - 1 பங்கு (வறுத்து பொடித்தது (6 : 1), எள்ளு - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம்,
உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1 டீஸ்பூன்.
அரிசி மாவை வெறும் கடாயில் 5 நிமிடம் வறுத்தெடுத்து, அகண்ட பாத்திரத்தில் போட்டு, உளுந்து மாவு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும். குறிப்பாக தளர பிசையக்கூடாது.
சீடை வெடிக்கமாலிருக்க ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். அப்போது, உருண்டைகள் உலர்ந்துவிடும்.
ஸ்டவ்வில் கடாயை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன், சீடை உருண்டைகளை போட்டு மீடியம் தணலில் பொரித்தெடுக்கவும்.
ஒரு சில நிமிடங்களில் சீடை வெந்தவுடன் மிதந்து மேலே வரும்.
சீடை வெடிக்காமலிருக்க அரிசி மாவை வீட்டிலேயே தயாரிப்பது அவசியம். அதில், கண்ணுக்கு தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து எண்ணெய் தெரிக்கக்கூடும்.
எனவே, அரிசி மாவு, உளுந்து மாவு, இரண்டையும் சல்லடையில் நன்றாக சலித்துக் கொள்ளவும். அரிசியை போல, உளுந்தையும் சீராக வறுத்த பின், மாவாக அரைக்கவும்.
எண்ணெயை அதிகளவில் காய விட்டாலும், சீடைகள் வெடிக்கும்; உள்ளேயும் சரிவர வேகாது. எனவே, மிதமான தணலில் பொரித்தெடுக்கவும்.
சீடையை உருட்டும்போதே, கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டினால், விரிசல் விடாது; பொரிக்கும்போதும் வெடிக்காது.