புதிதாக கற்பது மன அழுத்தத்தை குறைக்கும்!
சமீப காலமாக இளம் வயதினருக்கு நிறைய மனநலம் சார்ந்த பிரச்னைகள் வருகின்றன. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுதும் இதுதான் நிலைமை.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் வளரும் சூழ்நிலை, கல்வி, போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்பு என அனைத்தும் போட்டி நிறைந்ததாக உள்ளன.
இதை எதிர்கொள்வதற்கு தகுந்தவாறு, அவர்களை நாம் தயார் செய்கிறோமா என்பது சந்தேகம் தான்.
மாணவர்கள், உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பொருளாதார வசதியுள்ள சிலர் உடனடியாக 'ஸ்டார்ட் அப்' கம்பெனி துவக்கி விடுகின்றனர்.
ஆனால், வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள், நமக்கு இன்னும் கிடைக்கவில்லையே என மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது, திறமையானவராக, சாதிப்பவராக இருந்தாலும், நாம் எதையும் செய்யவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை வருகிறது.
இத்துடன் சேர்த்து, பல மணி நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாலும் பதற்றம், மன அழுத்தம் ஏற்படுகிறது.
இது தவிர, குடும்பத்தினருடன் மனதளவில் நெருக்கமாக இல்லாமல், நட்பு வட்டாரங்களும் குறைவாகவுள்ள இளைஞர்களுக்கும் மன பிரச்னைகளை துாண்ட காரணமாக அமைகிறது.
இவற்றை துவக்க நிலையிலேயே கண்டறியும் போது, பதற்றம், பயம், குழப்பம் போன்றவற்றுக்கு சரியான ஆலோசனை, சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்த முடியும்.
சத்தான உணவு, உடற்பயிற்சி என தினசரி வாழ்க்கையில், பெற்றோர் கண்காணித்து வழிகாட்டினாலே இது போன்ற பிரச்னைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றலாம்.
பாடங்கள் தவிர, ஆர்வமுள்ள வேறொரு புதிய விஷயத்தைக் கற்பது, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள பெற்றோர், நெருங்கிய சிலர் இருப்பதும் அவசியம்.
இவையெல்லாம் செய்த பின்னும், மன அழுத்தம், பதற்றம் இருப்பது தெரிந்தால், உடனடியாக மன நல ஆலோசகர், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
உடல் நலம் குறித்த புரிதல் ஓரளவிற்கு தற்போது உள்ளது; அதேவேளையில் மன நலமும் முக்கியம் எனபது மனநல ஆலோசகர்களின் அட்வைஸாகும்.