'சி-விஜில்' பயன்பாடு தமிழகத்தில் மந்தம்!
வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல்விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க 'சி-விஜில்'எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம்.
தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.
இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மீறலைப் புகாரளிக்க cVIGIL இல் பயனர் தனது கேமராவை ஆன் செய்தவுடன், பயன்பாடு தானாகவே புவி-குறியிடல் (location) அம்சத்தை செயல்படுத்துகிறது.
இதன் பொருள், பறக்கும் படைகள் புகாரளிக்கப்பட்ட மீறலின் துல்லியமான இருப்பிடத்தை அறிய முடியும், மேலும் குடிமக்கள் கைப்பற்றிய படத்தை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக, கேரளாவில் 71,168 புகார்கள் வந்துள்ளன. இவற்றில், 70,929 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, உத்தரகண்ட் மாநிலத்தில், 14,684; கர்நாடகாவில் 13,959; ஆந்திராவில் 7,055 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் வழியே புகார் அளிப்பது, தமிழகத்தில் மந்தமாகவே உள்ளது. தமிழகத்தில், 2,168 புகார்கள் பெறப்பட்டதில், 2,139 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.