நீரிழிவை கட்டுக்குள் வைக்க வாழ்க்கை முறை சீரமைப்பு அவசியம்

உலகளவில் ஆரோக்கியம் சார்ந்த சவால்களில் நீரிழிவு பாதிப்பு முக்கிய இடத்திலுள்ளது.

அபாயகரமான புற்றுநோய் இறப்பு விகிதத்தைவிட நீரிழிவு பாதிப்பின் பாதப் பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதமானது தற்போது அதிகமாக உள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம், நுரையீரல், மூளை போன்ற உடல் உறுப்புகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்துடன் கால் பாதங்களுக்கு தர வேண்டும்.

நீரிழிவை தொடர்ந்து ஆணிக்கால்கள், பாதப் புண்கள், சிரைக் குழாய் புண்கள், சார்கோட் சிதைவு, பூஞ்சைத் தொற்றுகள் போன்ற பாதப் பிரச்னைகள் உண்டாகின்றன.

இதனால், 85 சதவீதம் கால்களை அகற்றும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், துவக்க நிலையில் உருவாகும் சிறிய நரம்பியல் பாதப்புண்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்தால், கால்களை அகற்ற வேண்டிய சூழலை தவிர்க்கலாம்.

தவறாமல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாதப் பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும். வீட்டிலேயே தினமும் கண்ணாடி உதவியுடன் கால்களை பரிசோதிக்க வேண்டும்.

சிறப்பு பாதுகாப்பு காலணிகளை அணிவது, நகங்களை வளைவாக அல்லாமல் நேராக வெட்டுவது, வெறும் கால்களுடன் தரையில் நடப்பதை தவிர்ப்பது போன்றவற்றை சரியாக பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு என்பது தற்காலிகமானது அல்ல; நீண்ட கால வாழ்வியல் நிலை என்பதை உணர வேண்டும்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.