லைர் பேர்ட்... மிமிக்ரி பறவை இது!

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மழைக்காடுகளில் காணப்படும் பறவையினம், லைர் பேர்ட். தமிழில், 'யாழ்பறவை' எனவும் கூறப்படுகிறது.

இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. வீட்டில் வளர்க்கும் கோழி அளவில் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

இறகுகளுடன் நீண்ட வால் உடைய ஆண் பறவை, அதை விரிக்கும் போது, பழங்கால இசைக் கருவியான, 'லைர்' வடிவத்தில் காட்சி தரக்கூடும்.

கேட்கும் ஒலியை அப்படியே, 'மிமிக்ரி' செய்யும் திறனுடையது. மற்ற பறவை குரல்களை மட்டுமின்றி, இயந்திரங்கள் இயங்கும் போது ஏற்படும் சத்தத்தையும், தத்ரூபமாக பிரதிபலிக்கும்.

மரம் அறுக்கும் ரம்ப சத்தம், கேமரா கிளிக்கிங், வாகனங்களில் ஹார்ன் ஒலிப்பது மற்றும் மனிதர்கள் பேசுவது போல் சில சொற்களை, அப்படியே திரும்ப சொல்லும் திறன் உடையது.

முதலில் ஆண் பறவை, தன் மிமிக்ரி திறமையை முன் வைத்தே, பெண் பறவையை ஈர்க்கிறது. இதற்காகவே, கேட்கும் புதிய ஒலிகளை எல்லாம் கற்று கொண்டே இருக்கிறது.

காட்டில் தன் எல்லைக்குள் பிற பறவைகள் வராமல் தடுப்பதற்காக, புதிய ஒலிகளை பயன்படுத்துகிறது, இந்த பறவை.

பிற பறவைகளின் குரல்களை ஒரே நேரத்தில் எழுப்புவதன் வாயிலாக, சூழலில் ஒரு மாயையை உருவாக்குகிறது. இதனால் எதிரியின் பார்வையை, திசை திருப்புகிறது.

எதிரியை பயமுறுத்தி கூட்டை பாதுகாக்கும் வகையில், பெண் பறவை மிமிக்ரி செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தில் வாழும் இப்பறவை. வீழ்ந்து கிடக்கும் உலர்ந்த இலைகளை கிளறி, பூச்சி, புழுக்களை வேட்டையாடி உண்ணும்.

இனப்பெருக்க காலத்தில், தரையில் மேடை போன்ற அமைப்பை உருவாக்கும் ஆண் பறவை. அழகிய நீண்ட வாலை தலைக்கு மேல் குடையாக விரித்து, ஒலிகளை எழுப்பி நடனமாடும்.

இது, பெண் பறவையை கவர்வதற்கான வழிமுறை என கணித்துள்ளனர், பறவையியல் அறிஞர்கள்.