ஸ்கின் கிரீம்களில் ஆபத்தை உண்டாக்கும் உலோகங்கள் உள்ளதா?

தோலின் அடர்த்தி அதிகரிப்பது பிக்மென்டேஷன். அடர்த்தி குறைந்து பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக, 'டி பிக்மென்டேஷன்' கிரீம்களை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.

தோலின் நிறத்தை நிர்ணயம் செய்வது, மேலடுக்கில் உள்ள 'மெலனின்' என்ற நிறமி. கிரீம்களில் உள்ள வேதிப்பொருட்கள், மெலனின் மேல் செயல்பட்டு அதன் அடர்த்தியை குறைக்கும்.

பாதரசம் ஈயம் போன்ற உலோகங்கள் இந்த கிரீம்களில் அடிப்படை மூலப்பொருட்களாக உள்ளன.

இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தும்போது, அதிக அளவில் நச்சுகள் உடலில் கலப்பதால் சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டலம் கோளாறுகள் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

பாதரசத்தின் பாதிப்பால் 'அக்ரோடைமியா' எனப்படும் கால்கள், கைகளில் தோல் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது, வெளிச்சத்தை பார்க்க சிரமப்படுவது, நரம்பு பாதிப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம்.

ஹைட்ரோகுயினோன் என்கிற நச்சுத்தன்மை நிறைந்த வேதிப்பொருளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, தோல் சிவத்தல், எரிச்சல், அடர்த்தியாவது, நெகிழும் தன்மை குறைவது உட்பட பல பிரச்னைகளும் ஏற்படலாம்.

ஆகவே சரும லோஷன் பயன்படுத்துவதற்கு முன், தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது.