பிஸ்கட் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

எந்த உணவாக இருந்தாலும், அது, 100 டிகிரி செல்ஷியசுக்கு மிகாத வெப்பத்தில் சமைத்ததாக இருக்க வேண்டும். அது தான் செரிமான மண்டலத்திற்கு நல்லது.

ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகள் மட்டுமே, 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் சமைக்கப்படுகின்றன.

பிஸ்கட் போன்ற பேக்கரி மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் குடலுக்கு அதிக பாதிப்பை தரும்.

எண்ணெயில் பொரிக்கும் போது, 180 - 280 டிகிரி வரைக்கும் மாறுபடும். பிஸ்கட்டை, 'பேக்' செய்வதற்கும், இதே அளவு வெப்பம் தேவைப்படுகிறது.

வெறும் கலோரி தவிர, எந்த சத்துக்களும் இல்லை என்பதுடன், அதிக வெப்பத்தில் தயாராகும் பிஸ்கட், நொறுக்குத் தீனி போன்றவை குடலுக்கு அதிக வேலைப்பளு தரும்.

சிரமப்பட்டு செரிமான வேலையை செய்வதால், செரிமான மண்டலம் காலப்போக்கில் பலமிழந்து விடும். பிஸ்கட் சாப்பிட்ட ஓரிரு நாளில் இது தெரியாது.

தொடர்ந்து இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தின் உறிஞ்சும் தன்மை குறையக்கூடும்.

இதனால், அடிப்படை சத்துக்கள் இயற்கையாக உள்ள கீரை, பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றில் உள்ள நல்ல சத்துக்களை உறிஞ்ச முடியாமல், சிறு குடல் பலமிழந்து விடும்.

இது தவிர, பிஸ்கட், பேக்கரி பொருட்களில், 'ஹைட்ரோஜெனேடட்' எண்ணெய் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

தொடர்ந்து, இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் அதிகரிக்கிறது.

வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு துவங்கி, கேன்சர் வரை அனைத்து பிரச்னைகளும் வருகிறது.

எனவே, பிஸ்கட் மட்டுமின்றி, துரித உணவுகளான சமோசா, பீட்சா, பர்கர் போன்றவற்றையும் தவிர்ப்பது பாதுகாப்பானது; வீட்டில் தயாரிக்கும் பாரம்பரிய நொறுக்குத் தீனி நல்லது.