டஸ்ட் அலர்ஜி காரணங்களும் தீர்வுகளும்…
சிலருக்கு வீடு கூட்டினாலே போதும், தும்மல் ஆரம்பித்து விடும். இதற்கு காரணம், 'டஸ்ட்' அலர்ஜி என்கிறது மருத்துவ உலகம்.
நமக்கு ஒத்துக்கொள்ளாத ஒரு பொருள், நமக்குள் போகும்போது அதை வெளியேற்றும் முயற்சியாக நமது உடம்பு வெளிப்படுத்தும் அறிகுறிகள்தான் அலர்ஜி.
அலர்ஜி என்பது மரபணுக்கள் சார்ந்து வரக்கூடிய பிரச்னை. இது பெரும்பாலும் கண், மூக்கு, தொண்டை, நுரையீரல், தோல் போன்ற இடங்களில் ஏற்படலாம்.
அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருள் ஒருவரின் உடலில் படும்போது 'ஹிஸ்டமின்' எனும், ஒரு வேதியியல் பொருள் சுரக்கும்.
இது, ஒரு சில எதிர்வினை மாற்றங்களை ஏற்படுத்தி எரிச்சல், வீக்கம் மாதிரியான தொந்தரவுகளை கொடுக்கும்.
அலர்ஜி ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. துாசி, விலங்குகளில் ரோமம், பூக்களின் மகரந்தம் உள்ளிட்டவற்றால் ஒவ்வாமை எனும் அலர்ஜி ஏற்படுகிறது.
அலர்ஜி உள்ளதா என்பதை, ஒரு சில ரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எந்த பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள, 'ஸ்கின் பிரிக்' போன்ற பரிசோதனைகள் உண்டு.
அலர்ஜி ஏற்படுத்தும் அந்த குறிப்பிட்ட பொருளை, தவிர்க்க வேண்டியது மிக மிக முக்கியம். அலர்ஜி-யினால் ஏற்படும் தொந்தரவுகளை பொறுத்து, மாத்திரைகளும் மருந்துகளும் வேறுபடும்.