நானேகாட்... இது தலைகீழ் நீர்வீழ்ச்சி !
மஹாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது நானேகாட்.
இங்கு, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம். அப்போது மலை உச்சியில் 150 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் பாய்கிறது.
அது, பள்ளத்தாக்கில் இருந்து வீசும் காற்றால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. அப்போது, சூரிய ஒளியில் நீர்த்திவலைகள், வானவில் நிறங்களை உருவாக்கும்.
இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை தான் தலைகீழ் நீர்வீழ்ச்சி என்பர். இந்த அரிய காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிவர்.
நானேகாட் வரலாற்றில் சாதவாகன வம்ச காலத்தில் கொங்கன் கடற்கரையையும், தக்காண பீடபூமியையும் இணைக்கும் வர்த்தக பாதையாக பயன்பட்டது.
இங்குள்ள குகைகளில் பிராமி, தேவநாகரி எழுத்துருவில் உள்ள பழமையான கல்வெட்டுகள் சூரியன், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் சிறப்பையும், அரசர்களின் சாதனைகளையும் கூறுகின்றன.
நானேகாட் தலைகீழ் நீர்வீழ்ச்சி, வரலாற்றின் எச்சங்களையும், இயற்கையின் அழகையும் அனுபவிக்க வைக்கும் சொர்க்கமாகும்.