முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகள்.. ஆய்வு செய்ய உத்தரவு!

முட்டைகளில் உடலுக்கு கேடு விளைவிப்பதாக தடை செய்யப்பட்ட, 'ஆன்டிபயாடிக்' ( நோய் எதிர்ப்பு) மருந்துகள் உள்ளதா என்பதை நாடு முழுதும் பரிசோதனை செய்ய உத்தரவு விடுக்கப்படுள்ளது.

மேலும் அது அதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்கும்படி மண்டல அலுவலகங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த பிரபலமான நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட, 'நைட்ரோபியூரான்' எனும், 'ஆன்டிபயாடிக்' மருந்தின் தடயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அங்குள்ள 'யு டியூப்' சமூக ஊடகத்தில் ஒருவர் ஆய்வக பரிசோதனை அறிக்கையுடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

'நைட்ரோபியூரான்' எனும் ஆன்டிபயாடிக் மருந்து கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அதை மனிதர்கள் உண்ணும் போது, அந்த மருந்து உடலில் நீண்ட காலம் தங்கி, புற்றுநோய் மற்றும் மரபணு சேதத்தை ஏற்படுத்த கூடியது என ஆய்வில் கண்டறிந்தனர்.

இதையடுத்து இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் 'நைட்ரோபியூரான்' ஆன்டிபயாடிக்கை தடை செய்தன.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து தனியார் நிறுவன முட்டையில் கண்டறியப்பட்டுள்ளதால், மக்களிடையே முட்டையை உண்பது குறித்த அச்சம் எழுந்துள்ளது.

இதனால் டில்லியில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.