கடலில் மூழ்கிய பண்டைய துவாரகாவில் வழிபட்ட மோடி !

பிரதமர் நரேந்திர மோடி, தேவபூமி துவாரகா மாவட்டத்தில், பேட் துவாரகா தீவுக்கு அருகே, கடலில் மூழ்கியுள்ள பண்டைய துவாரகா நகருக்கு சென்றார்.

இதற்காக, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சலடித்து, கடற்படை ஆழ்கடல் வீரர்கள் உதவியுடன் சென்றார். ஸ்கூபா டைவிங் செய்வதற்கான ஹெல்மெட் அணிந்தார்.

காவி நிறத்தில் பாரம்பரிய உடையுடன் இருந்த அவர், கடலுக்குள் மூழ்கிய நகரில் சம்மணமிட்டு பிரார்த்தனை செய்தார்.

மேலும், கையில் எடுத்துச் சென்ற மயிலிறகை காணிக்கையாகச் செலுத்தினார். சிறிது நேரம் அங்கு தியானத்தில் இருந்த அவர், பண்டைய துவாரகா நகரின் பகுதிகளை பார்த்தார்.

நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்

ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன்.

அங்கு இருந்தபோது, அந்த பண்டைய நகரைத் தொட்டபோது, 21ம் நுாற்றாண்டில், இந்தியாவின் பிரமாண்ட வளர்ச்சி என் கண் முன்னே வந்து சென்றது.

கடலுக்கடியில் இருந்தபோது, நம் நாட்டை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற உறுதி மேலும் வலுபட்டுள்ளது.

இந்த புனித நகரை பார்க்க வேண்டும்; அதை தொட வேண்டும் என்ற என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. இது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது என மோடி கூறியுள்ளார்.

ஹிந்து கடவுள் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகா நகரம், மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகக் கருதப்படுகிறது.

இது கடலுக்கடியில் மூழ்கியுள்ளது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் சில பகுதிகளை மீட்டுள்ளனர். ஆழ்கடலில் நீச்சலடித்து சென்று அதை பார்க்க முடியும்.