குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் பெற்றோரின் சண்டை... எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

பெற்றோரிடையே ஏற்படும் தகராறுகளை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்கள் மனதில் பாதுகாப்பின்மை, அச்சம், தாழ்வு மனப்பான்மை மற்றும் குற்ற உணர்வு உருவாகும்.

இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எதிர்கால உறவுகள் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும்.

அந்த குழந்தைகளால், நண்பர்களுடன் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் வருவதால், மற்றவர்கள் விலகி செல்வர்; , அக்குழந்தைகள் தனிமைப்படும்.

இந்த பாதிப்புகள் கல்வியிலும் கட்டாயமாக எதிரொலிக்கும். பள்ளியில் செயல்திறன் குறைதல், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் உறவு பிரச்னைகள் போன்றவை உருவாகும்.

மனஅழுத்தம் நீடித்தால், குழந்தைகளின் உடல் நலனும் பாதிக்கும். சரியாக தூங்க மாட்டார்கள். எந்த உணவின் மீதும் நீடித்த விருப்பம் இருக்காது.

தலைவலி, வயிற்றுவலி போன்ற மிதமான உடல் நலக்குறைவுகள் தவிர காலப்போக்கில் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் இந்த மன அழுத்தம் பாதிக்கும்.

எனவே, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் கற்றல் திறன் வெகுவாக குறைந்து, எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் அபாயமுள்ளதால், பெற்றோர் உணர்ந்து நடக்க வேண்டும்.