நாங்க இருக்கோம்.. கவலைப்படாதே... பெண் பிள்ளைகளுக்கு நம்பிக்கை குடுங்க பெற்றோரே!

திருமணமாகி செல்லும் பெண்கள், பெற்றோரிடம் கஷ்டங்களை சரிவர பகிர்வதில்லை; பிறர் முன் பெற்றோர் அவமானப்படவோ, கஷ்டப்படவோ கூடாது என்பதே காரணம்.

எனவே, திருமணத்துக்கு முன் பெற்றோர், பிள்ளைகளுடன் பேசுங்கள். அவர்களின் மனநிலை, விருப்பம் என்னவென்பதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு இடத்தில், மணமகன் செயல்பாடு பிடிக்கவில்லை, பேசுவது பிடிக்கவில்லை என பெண்கள் கூறினால், சற்று அதில் கவனம் செலுத்துங்கள்.

வசதியை மட்டும் பார்த்து முடிவு எடுக்கக்கூடாது. எந்த சூழலிலும், தவறு உன் மீதே இருந்தாலும், தயக்கமின்றி வா என்ற நம்பிக்கையை பெற்றோர் தர வேண்டும்.

திருமணத்துக்கு பின் பெண் வேலைக்கு செல்லக்கூடாது, பணம் வேண்டும் என்று அதிக கெடுபிடி செய்யும் சம்மந்தங்களை வசதிக்காக ஒத்துக்கொண்டு வேதனைப்பட வேண்டாம்.

பெண் விரும்பினால் திருமணம் முடிந்து படிப்பாள்; வேலைக்கு செல்வாள் அல்லது தொழில்முனைவோராக இருப்பாள் என்பதை தெளிவாக முன்கூட்டியே கூறிவிடுங்கள்.

உயர்கல்வி முடித்தவுடன் திருமணத்தை செய்துவிடாமல், இரண்டு ஆண்டுகளாவது வேலைக்கு அனுப்புங்கள்.

குறிப்பாக வெளியூரில் வேலைக்கு அனுப்பும்போது, அங்கு கிடைக்கும் அனுபவங்கள் உலகை புரிந்துகொள்ளவும், சுயமாக முடிவெடுக்கவும் உதவக்கூடும்.

அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள். குறை கூறும் சுற்றத்தாரின் கருத்துக்களை புறம் தள்ளி பிள்ளைகளின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல, ஆண் பிள்ளைக்கும் சமையல் கற்றுக்கொடுங்கள். வசதிகள் கொட்டிக்கிடந்தாலும் திறமையும், வேலை பகிர்வு முக்கியம் என்பதை உணர்த்துங்கள்.

யாரையும் சாராமல் சிறகை விரித்து பறக்கும் தைரியத்தை கற்றுக்கொடுங்கள்; அனைத்துக்கும் எல்லையுண்டு; அத்துமீறும் போது, உதறி செல்லும் துணிவையும் கொடுங்கள்.