மது, புகை பழக்கத்திலிருந்து மீள பொறுமை அவசியம்

மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலரும், இதிலிருந்து வெளியே வர வேண்டும் என நிச்சயம் விரும்புவர்; அதன் அளவுகோல் தான் மாறுபடும்.

ஒரு சதவீதமாவது விருப்பம் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. இந்த விருப்பத்தை மையப்படுத்தி, குடும்பத்தினர், நண்பர்கள் பேச வேண்டும்.

'நாளை முதல் இப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும்' என்று சொல்லாமல், இதிலிருந்து வெளியே வருவதற்கான சிந்தனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

தவிர்க்க முடியாத நெருங்கிய உறவினர், நண்பர்களின் பேச்சு மட்டுமே அவர்களிடம் எடுபடக்கூடும். குறைந்தது 6 மாதங்களாவது, கட்டாயப்படுத்தாமல், இயல்பாக பேச வேண்டும்.

அப்போதுதான், இதிலிருந்து வெளியில் வர வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் உறுதிப்பட்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகரிக்கும்.

முடிந்தளவு அவர்களை தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது. யாராவது ஒருவர் உடனிருந்து தனிமையை குறைக்க வேண்டும்.

மதுப் பழக்கம் இல்லாத மற்ற பழைய நண்பர்களை அவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அதிகப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்காது என்பதால், அவர்களுக்கு அறிவுரை கூறவே கூடாது. அன்பும், அரவணைப்பும் தான் அவர்களை மாற்ற முயற்சிக்கும்.

அவர்களின் உண்மையான பிரச்னை என்ன? அதற்கு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை குடும்பத்தினர், நண்பர்கள் நன்கு அறிவர். அதை பக்குவமாக, எடுத்து சொல்ல வேண்டும்.

அவர்களின் சிறப்புகள், திறமைகள் என்று உயர்த்தி கூறும்போது தான், நம் பேச்சு எடுபடும்.

இப்பழக்கத்தில் இருந்து அவர்களை வெளியில் கொண்டு வர, இதற்கு நிகரான வேறு ஒன்றை செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக பிடித்த உணவு, சுற்றுலா என அவர்களை கவரக்கூடிய விஷயங்களை முயற்சிக்கலாம். வாரமொரு முறை இதை செய்யதாலே, வெற்றியின் முதல் படியில் உள்ளதாக அர்த்தம்.