எப்போதும் ஏ.சி.யில் இருப்பவர்களுக்கு எலும்பு பாதிக்கப்படும் வாய்ப்பு

ஏ.சி. அறையில் தூக்கம், ஏ.சி. ஆபீசில் வேலை, ஏ.சி.காரில் பயணம் என உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு, எலும்புகள் சீக்கிரம் பலவீனமாவதாக, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

எலும்புகள் அடர்த்தி குறைந்து, பலவீனமாக மாறும் நிலை தான் 'ஆஸ்டியோபோரோசிஸ்'. இதில் ஆரம்ப அறிகுறிகள் இருக்காது. எலும்பு முறிவு ஏற்படும் வரை, இதை அறிய முடியாது.

எலும்பில் அடிக்கடி வலி ஏற்படுதல், சிறிய காயம் பட்டாலே எலும்பு முறிவது, முதுகு தண்டுவடம், இடுப்பு, மூட்டு, மணிக்கட்டில் வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.

10, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, 50 வயது தாண்டியவர்களுக்கே இந்த நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மாறிவரும் வாழ்வியல் முறை மட்டுமே இளைஞர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்பட மிக முக்கிய காரணம்.

இரவு, பகல் மாறி மாறி வேலை செய்வது, ஏசி ரூமிலேயே அதிக நேரம் இருப்பது ஆகியவற்றால், சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி இவர்களின் உடலுக்கு கிடைப்பதில்லை.

இதுதவிர, துரித உணவு சாப்பிடுவது, கார்பனேட் செய்யப்பட்ட பாட்டில் குளிர்பானம், மது, சிகரெட் பழக்கத்தாலும் எலும்பு தேய்மானம் அடைகிறது.

பெண்களுக்கு, மாதவிடாய் நின்ற பிறகு இப்பாதிப்பு ஏற்படலாம்.

எனவே, கால்சியம் நிறைந்த சத்தான உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எலும்புகளில் வலி இருந்தால் உரிய சிகிச்சை பெறுவதன் மூலம், மீண்டும் எலும்பை வலுவாக்கலாம்.