பிரபல மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி கலப்பு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் தயாராகும் 2 பிரபல மசாலா பொடி தயாரிப்பு நிறுவனங்களின் மிளகாய், மஞ்சள் பொடிகளில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு இருப்பது, ஆய்வக அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

ரசம், சாம்பார், துவங்கி அனைத்து உணவுகளிலும் மஞ்சள், மிளகாய் பொடி சேர்க்கப்படுகிறது.

மிளகாய் பொடியில், 'காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட் ராக்சைடு, காப்பர் சல்பேட், குப்ரஸ் ஆக்சைடு' ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுதவிர, 'குளோரான்ட்ரானிலிப்ரோல், சைபர்மெத்ரின் போன்ற பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளும் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

கிருமி நாசினியான மஞ்சள் பொடியில், 'சைபர்மெத்ரின், தியாமெதோக்சம்' போன்ற பூச்சிக் கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கலந்து இருப்பது ஆய்வக முடிவுகளின்படி தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக முடிவுகளின் படி, பிரபல நிறுவனங்களில் மிளகாய், மஞ்சள் பொடி உணவு பாதுகாப்பு தரநிலைக்கு தகுதியானவை இல்லை என, முடிவுகள் வந்துள்ளன.

இப்பொடிகளில் உள்ள பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு வரலாம்.

தவிர, கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு மிகவும் அபாயகரமானது. குழந்தைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், புற்றுநோய் பாதிப்பு வரலாம் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.