சிசுக்கள் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்: ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களின் துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர்.

இதனால், மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பில் நடந்து வருகின்றன.

குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை கோவை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே, பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பிரச்னையில் இருந்து பாதுகாப்பாக இருக்க கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடங்களுக்கு செல்லும்போது 'மாஸ்க்' அணிவது, சரிவிகித ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.