இளைஞர்களை பாதிக்கும் பக்கவாதம்

கொரோனாவிற்கு பின், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான ரத்தக் குழாய் சார்ந்த நோய்கள் இளைஞர்களை அதிகம் பாதிக்கின்றன.

இவற்றில் ஆறுதலான விஷயம், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால், வயதானவர்களை விடவும், இளைஞர்கள் குணமாகும் விகிதம் அதிகம்.

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் நரம்பியல் பிரச்னைதான் பக்கவாதம். இது, இரண்டு விதங்களில் ஏற்படலாம்.

ஒன்று, தமனியால் ஏற்படும் பக்கவாதம் என்பது தமனிகளில் அடைப்பு, மூளைக்குள் ரத்த கசிவதால் ரத்தக் குழாயில் சிதைவு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு போன்றவற்றால் ஏற்படலாம்.

அடுத்தது, ரத்த நாளங்கள் பிரச்னையால் ஏற்படும் பக்கவாதம். இது, மூளையில் இருந்து ரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் அடைப்பு காரணமாக ஏற்படலாம்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ள எந்தவொரு நோயாளியையும் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும்.

சி.டி, எம்.ஆர்.ஐ., மூளை ஸ்கேன் பரிசோதனையின் அடிப்படையில், அறிகுறி தோன்றிய 4.5 மணி நேரத்திற்குள் ரத்த ஓட்டத்தை சீராக்கும், 'திரோம்போலிடிக் தெரபி' சிகிச்சை அளிக்க வேண்டும்.

அறிகுறி தோன்றிய 6 - 24 மணி நேரத்தில் செய்யப்படும் ஐவி திரோம்போலிசிஸ், மெக்கானிக்கல் திரோம்பெக்டோமி ஆகிய 2 சிகிச்சை முறைகளும் உயிரிழப்பை குறைத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் கொழுப்பு, அதிக உப்புள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், கெட்ட கொழுப்பு அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிகரெட், மது பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள், வாரத்திற்கு நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.