உலக நாடுகளில், பொங்கல் விழா!

அறுவடை திருநாளை, பொங்கல் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். இந்த விழா, வெவ்வேறு வடிவத்தில் உலகின் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதுபற்றிய சில தகவல்கள்..

ஆப்ரிக்காவின் அறுவடை திருநாள், 'யாம் பெஸ்டிவல்!' யாம் என்பது, நம்ம ஊர் கருணைக்கிழங்கு தான். மழைப்பருவம் முடிந்ததும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் திருவிழா.

முதல் அறுவடை செய்த, கருணைக்கிழங்கை கடவுளுக்கும், மூதாதையர்களுக்கும் படைத்த பிறகு தான், சமைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும் என்பது, அந்த மக்களின் வழக்கம்.

மேற்கு ஆப்ரிக்காவின், கானா நாட்டினர் கொண்டாடும் பிரமாண்டமான அறுவடைத் திருவிழா, 'ஹோமோவா!' முதல் பழங்கள் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

முதலில் அறுவடை செய்யும் திராட்சை, இதர பழ வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களை கடவுளுக்கு படைத்து சாப்பிட்டால், அவை புனிதமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

மே மாதத்தில் நடக்கும் இந்த திருவிழாவின் போது, சிறுதானியங்களை விதைப்பதும் நடக்கும்.

இஸ்ரேலியர்களின் வேதப்புத்தகம், தோரா. அதில் கூறியபடி, ஏராளமான அறுவடைத் திருவிழாக்களை அவர்கள் கொண்டாட வேண்டும்.

இவற்றுள் முக்கியமான திருவிழா, 'சுக்கோத்!' இந்த திருவிழா, ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இந்த திருவிழா மத மற்றும் வேளாண்மை சார்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.

அறுவடை செய்யும் திராட்சை மற்றும் இதர பழ வகைகளை படைப்பர். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இது கொண்டாடப்படும்.