குளிர்ந்த தரையில் படுத்தால் முகவாதம் வரும் பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில், டெங்கு, சிக்குன் குனியா போன்ற பாதிப்புகளை போல, கடும் குளிரில் முகவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது .
முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி, வைரஸ் தொற்று போன்றவற்றால் ஏற்படும் பிரச்னை தான் முகவாதம்.
இதனால், வாயை குவிக்க முடியாது, உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழியே எச்சில் வடிவதுடன், சரியாக பேச இயலாமல் குளறும்.
எனவே, குளிர்ந்த தரையில், பாய், தலையணை உள்ளிட்ட விரிப்பு கள் இல்லாமல் படுப்பதையோ, ஒரு பக்க கன்னத்தை, நேரடியாக குளிர்ந்த தரையில் வைத்து படுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
முகத்தை நேரடியாக தரையில் வைத்து படுப்பதன் வாயிலாக, முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல, கார், பஸ், ரயில்களில், அதிக நேரம் குளிர்ந்த காற்று, காது, கன்னம் பகுதியில் படும்படி பயணித்தாலும் முகவாதம் ஏற்படும்.
இந்த பாதிப்பு ஏற்பட்டால், குணமாவதற்கு இரண்டு முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, காது, கன்னம் பகுதியை பாதுகாப்பது அவசியம்.
முகவாதம் பாதிப்பு கண்டறியப்பட்டால், அதை தெரியப்படுத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடபட்டுள்ளது.
எவ்வகை பாதிப்பாக இருந்தாலும், உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம் என பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.