கோடை ஸ்பெஷல்: வடுமாங்காய் ஊறுகாய் போடுவோமா?

முதலில் மாவடுக்களை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். எட்டு தம்ளர் மாவடு எனில், ஒரு டம்ளர் கல் உப்பு, ஒரு டம்ளர் காரப் பொடி உபயோகப்படுத்த வேண்டும்.

காய்ந்த வெள்ளைத் துணி மீது பரப்பி ஆற விடணும். பின் அந்த வடுக்களின் மீது மெலிதாக விளக்கெண்ணெய் பூச வேண்டும்.

ஒரு பாத்திரத்தின் உள்ளே கல் உப்பு பரப்பி, அதன் மீது அடுக்கடுக்காக வடுக்களைப் பரப்ப வேண்டும். அப்போது ஒவ்வொரு அடுக்கின் இடைவெளியிலும் கல் உப்பை பரவலாகத் துாவவும்.

அந்தப் பாத்திரத்தை வெள்ளைத் துணியால் மூடி, கட்டி வைக்க வேண்டும். அந்தப் பாத்திரத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்து குலுக்க வேண்டும்.

பத்து நாட்களுக்குள் பாத்திரத்தில் உள்ளே இருக்கும் கல் உப்பானது, கரைந்து உப்பு நீராக மாறிப் போயிருக்கும்.

அந்த உப்பு நீரில் ஊறிக்கொண்டிருக்கும் மாவடுக்களுக்குள், ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

மாவடுக்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் உப்பு நீரானது மாவடுக்களின் மெலிதான தோலினைக் கடந்து, சவ்வூடு பரவுதல் முறையில் மாவடுக்களின் சதைப்பகுதிகள் முழுவதுமாக இரண்டறக் கலந்துவிடும்.

மிளகாய் வற்றல் கடுகு, கொஞ்சம் மஞ்சள் துாள் மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும்போது அதற்கான தண்ணீராக மாவடு ஊறிய அந்த உப்பு நீரைத்தான் பயன்படுத்த வேண்டும்.

அரைத்த காரப் பொடியை நீர் வடுக்களோடு சேர்த்துக் கலக்க வேண்டும்.

வடுமாங்காய் போட்டு வைத்துக்கொள்ள உகந்த பாத்திரங்கள், பீங்கான் ஜார், கண்ணாடி ஜார், பிளாஸ்டிக் டப்பா போன்றவைகளே.