திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி இதோ!

அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி அல்லது வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை, வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து கொடுப்பர்.

மேலும் பழங்காலம் முதலே நடராஜப் பெருமானுக்கு, திருவாதிரை நாளில், களி படைக்கும் பழக்கம் இருந்துவருகிறது. நம் வீட்டிலேயே திருவாதிரை களியை எப்படி செய்யலாம் என அறிந்துக்கொள்வோம்.

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பயத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த வெல்லம் - ஒரு கப், துருவிய தேங்காய் - அரை கப், நெய், முந்திரி மற்றும் ஏலப்பொடி - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, ரவை பதத்துக்கு, பொடித்து கொள்ளவும்.

இரண்டு கப் தண்ணீரில் வெல்லம் சேர்த்து, அது கரைந்த பிறகு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.

அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் ரவை பதத்துக்கு உடைத்த கலவையை சேர்த்து, சிறு தீயில் மூடி வைக்கவும்.

சிறிது வெந்த பின், கரண்டியால் கிளறி, ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து, நன்கு வேகவிட்டு இறக்கவும். தேவைப்பட்டால், வெந்த பின்பும் தேங்காய்த் துருவல் சேர்த்து கொள்ளலாம்.