அரிசி கழுவிய நீரை, இனிமே கீழே ஊற்றாதீர்கள்…

நம்முடைய உணவுகளில் மிக முக்கியமானது, அரிசி. தினமும் சமைக்கும் போது அரிசி கழுவிய நீரை பயன்படுத்தாமல் வீணாக்கி விடுகிறோம்.

ஆனால், அரிசி கழுவிய நீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ் மற்றும் அமினோ ஆசிட் நிறைந்துள்ளது. அது நம் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரிதும் துணை புரிகிறது.

அரிசி கழுவிய நீரில், இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன், பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும்; தளர்ந்திருக்கும் சருமத்தை இறுக்கமாக்கும்.

கழுநீரை தினமும், 'பேஷியல் க்ளன்சர்' ஆக பயன்படுத்தலாம். சிறிய துணி அல்லது பஞ்சை, அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து, முகத்தை துடையுங்கள்.

சிறிது நேரத்தில் தானாக காய்ந்து விடும், கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தினுள் நுழைந்து வினை புரியும்.

வெயிலில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு, சருமம் வறண்டு, விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, அரிசி கழுவிய நீரில், தினமும் முகம் கழுவலாம்.

சீனாவில் உள்ள யாவோ என்ற ஊரின் சிறப்பே, அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்கும் நீளமான முடி இருக்கும். கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது.

அவர்களின் நீளமான கூந்தலின் காரணம் தினமும், அரிசி கழுவிய நீரில் தலைக்கு குளிக்கிறார்கள். சாம்ப்பூ போன்று எதை தேய்த்து தலை குளித்தாலும் கடைசியாக, அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றுவார்களாம்.