ரோட்டுக்கடை வடகறி... ஈஸியாக செய்யலாம் !

ஊறவைத்த 150 கிராம் கடலைப்பருப்புடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை தலா ஒன்று, 1 டீஸ்பூன் சோம்பு, 4 வரமிளகாயை சேர்த்து மிக்சி ஜாரில் அரைக்கவும்; தண்ணீர் சேர்க்கக்கூடாது.

இதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, இட்லி பாத்திர தட்டில் உதிரி உதிரியாக வைத்து ஆவியில் வேக வைக்கவும். 10 நிமிடங்கள் இருந்தால் போதுமானது.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தலா 1 வீதம் போட்டு தாளிக்கவும்.

தொடர்ந்து, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, 1 ப.மிளகாயை வதக்கவும். பொன்னிறமாக வதங்கியவுடன் 1 டே.ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, 3 நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

பின், 3/4 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் கரம்மசாலாவை சேர்த்து தொக்கு பதத்தில் வதக்கவும். இதில், எண்ணெய் பிரியும்போது, சிறிது தண்ணீர், நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

கொதி வந்தவுடன் வேகவைத்த கடலைப்பருப்பு கலவையை கைகளால் நசுக்கி விட்டு சேர்க்கவும். கலவை நன்றாக கலங்கியவுடன் மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த கலவை கிரேவி பதத்தில் வந்தவுடன் 4 டீஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறவும். இதில், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால், இப்போது சுவையான வடகறி ரெடி.