ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
ஒரு காலத்தில் நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் குடியேற மக்கள் கனவு கண்டு கொண்டு இருந்தனர். அந்த காலம் மாறி, தற்போது துபாயில் குடியேற மக்கள் விரும்புகின்றனர்.
துபாய் வர விரும்புவோருக்காக, கடந்த 2019ம் ஆண்டு துபாய் கோல்டன் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது.
முன்பு கோல்டன் விசா, 4 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினருக்கு, 23 லட்சம் ரூபாய் கட்டணத்தில் புதிய வகை கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோல்டன் விசா பெறுபவர் பணி சான்று உட்பட எவ்வித ஆவணங்களும் இன்றி, 10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்க முடியும்.
அந்த விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உள்ளிட்டோருக்கு மிக எளிதாக விசா பெற்றுத்தர முடியும்.
மேலும், முதலீடுகள் வாயிலாக ஈட்டும் வருமானத்துக்கு வரி கிடையாது. கோல்டன் விசா இருந்தால் 133 நாடுகளுக்கு விசா- இல்லாமல் பயணிக்கலாம்.
இந்த விசா பெற முதலில் நம் நாட்டு அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
பின் யு.ஏ.இ., அங்கீகரித்த ஆலோசனை நிறுவனம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதை யு.ஏ.இ., அரசு ஆய்வு செய்து கோல்டன் விசா வழங்கும்.