ஒற்றுமையின் நாயகனே! இன்று தேசிய ஒற்றுமை தினம்
சுதந்திரத்துக்குப்பின் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமைக்குரியவர் வல்லபாய் படேல்.
'இரும்பு மனிதர்' என போற்றப்படும் இவரது பிறந்த தினம், அக்., 31ல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
குஜராத்தின் நாடியாத் கிராமத்தில் 1875, அக், 31ல் விவசாய குடும்பத்தில் பிறந்தார். ஆமதாபாத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். விடுதலை உணர்வுபின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.
காந்திஜியின் உப்பு சத்யாகிரக போராட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர்.
இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்த படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன.இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார்.
ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்தார். 1950, டிச. 15ல் காலமானார். மறைவுக்குப்பின் 1991ல் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.