பருவகால காய்ச்சல், இருமலுக்கு உருமாறிய கொரோனா காரணம்!
'தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதித்தது, உருமாறிய கொரோனா தொற்று என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வீரியம் குறைந்த வைரஸ் என்பதால், அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என கூறப்படுகிறது.
தமிழகத்தில் செப்., மாதம் துவங்கி, தற்போது வரை, காய்ச்சல், உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளால், லட்சக்கனக்காணோர் பாதிக்கப்பட்டனர்.
சிலருக்கு காய்ச்சல் சரியானாலும், நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை தொடர்ந்து வறட்டு இருமல் நீடித்தது.
இவ்வகை பாதிப்புகள், உருமாறிய கொரோனா ஏற்படுத்திய தாக்கம் என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், அதன் வைரஸ் வீரியம் குறைந்ததால், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கமான சிகிச்சை முறையை எடுத்து கொண்டு, மூன்று நாட்களில் குணமடைந்தனர்.
அதேநேரம், காய்ச்சலுக்கு பிந்தைய இருமல் பாதிப்பு இருக்க கூடும். அதற்கும் முறையான சிகிச்சை பெற்றால், பிரச்னை இருக்காது.
இந்த கொரோனா, மக்கள் அச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை. ஆண்டுதோறும் பருவநிலை காய்ச்சலாக, இதுவும் இருக்கும்; மக்கள் பதற்றமடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.